×

வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது- வானதி சீனிவாசன்

 

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் படம் வெளியான திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'அமரன்'திரைப்படம் திரையிடப்பட்டுள்ள, திருநெல்வேலி மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள அலங்கார் இரையரங்கில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த திரையங்கம் முன்பு கடந்த கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் போரில் வீர மரணம் அடைந்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாறுதான் அமரன் திரைப்படம். 

மக்களிடம் தேசபக்தியை விதைக்கும் இப்படத்திற்கு சில அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு மவுனம் காப்பதால், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இனியும் திமுக அரசும், காவல்துறையும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகிவிடும். ஒழுங்கை பாதுகாப்பதுதான் மாநில அரசின் முதல் கடமை வாக்கு வங்கி அரசியலுக்காக, அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது. பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யாத காவல்துறை, அதற்கு எதிராக வன்முறை கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்வதுடன், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேசபக்தி திரைப்படத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அடிப்படைவாதிகள் செயல்படுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.