×

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்- எவருக்கும் பாதுகாப்பற்ற மாநிலம்: வானதி சீனிவாசன்

 

சாமானிய பெண்கள் முதல் அரசு அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் வரை எவருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருகிறதா தமிழகம்? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஓட்டுநர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த முயன்ற பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெண் டிஎஸ்பி மீதான தாக்குதல் தொடர்பாக பாலமுருகன்  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “சாமானிய பெண்கள் முதல் அரசு அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் வரை எவருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருகிறதா தமிழகம்? சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள இந்த திராவிட மாடல் ஆட்சியில், பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் நாளொரு செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பெண் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை நடுரோட்டில் வைத்து தாக்க முற்படும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உட்பட காவலர் ஒருவர் மீது, சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ள சம்பவம் உண்மையில் கண்டிக்கத்தக்கது. நமது தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புள்ள காவல் துறையினரின் பாதுகாப்பே இன்று கேள்விக்குறியாகியுள்ளது என்பதுதான், இந்த திராவிட மாடல் ஆட்சியின் அவலம். எனவே, சட்டம் ஒழுங்கைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் நலன்கருதியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.