×

குழந்தைகளின் படிப்பில் அரசியல் செய்வது தான் 'திராவிட மாடல்' அரசின் நிர்வாகமா?- பாஜக சாடல்

 

தனியார் பள்ளி மாணவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்கள் அனைவரும் பணம் படைத்த குடும்பத்திலிருந்து வந்து விட்டனரா? ஏழை எளிய மக்கள், நடுத்தர குடும்பங்களின் சுமையை குழந்தைகளின் கல்வி செலவில் ஏற்றுவது அராஜகத்தின்  உச்சக்கட்டம் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு பாட நூல் கழக புத்தகங்களின் விலை மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டாலும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரு மடங்கு அதிகமாக இந்த வருடம் விற்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழக அரசுக்கு என்ன தீங்கிழைத்தார்கள்? என்ன பாவம் செய்தார்கள் என்று இந்த விலை உயர்வை பாடநூல் கழகம் செய்துள்ளது? 

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பதால், அந்த இழப்பை தனியார் பள்ளி மாணவர்களிடம் ஈடுகட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இது அநீதியல்லவா? தனியார் பள்ளி மாணவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்கள் அனைவரும் பணம் படைத்த குடும்பத்திலிருந்து வந்து விட்டனரா? ஏழை எளிய மக்கள், நடுத்தர குடும்பங்களின் சுமையை குழந்தைகளின் கல்வி செலவில் ஏற்றுவது அராஜகத்தின்  உச்சக்கட்டம். ஒரு சிலருக்கு மின்சாரம் இலவசம், பலருக்கு மின்சார கட்டணம் பன்மடங்கு உயர்வு; ஒரு சிலருக்கு பேருந்து இலவசம், பலருக்கு பேருந்து கட்டணம் உயர்வு; ஒரு சிலருக்கு ஆவின் மானியம்,பலருக்கு மானியம் ரத்து என்ற ரீதியில் பிஞ்சு குழந்தைகளின் படிப்பில் அரசியல் செய்வது தான் 'திராவிட மாடல்' அரசின் நிர்வாகமா?