×

“நோட்டா கட்சி என்பதெல்லாம் கடந்த காலம்.. இப்போது தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அரசியல் சக்தி”

 

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அரசியல் சக்தி என்பதை தேர்தல் முடிவு செய்துள்ளது என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கரூரில்,  பாஜக கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதாவிற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் பணியாற்றுவதற்கும் தேர்தல்கள் வாய்ப்பாக இருக்கிறது. அந்தவகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா நன்றாக எதிர்கொண்டது. பா.ஜனதாவை பொறுத்தவரை இது நல்ல தேர்தல். நோட்டா கட்சி என்பது எதிர்க்கட்சிகள், பா.ஜனதாவிற்கு ஒன்றுமில்லை என்பதை உருவாக்கத்தை கொடுப்பதற்கான ஏற்படுத்திய விளம்பர ரீதியான விஷயம். தற்போது பா.ஜனதாவில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றுள்ளனர். அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை தாண்டி அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். நோட்டா என்பது கடந்த காலம். தற்போது தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது.

சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். குடி என்பது தமிழகத்தில் சர்வசாதாரணமான விஷயம் என அமைச்சர்கள் கொண்டு செல்கிறார்கள். பூரண மதுவிலக்கை கொண்டு வரமுடியாது என அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதன் வாயிலாக, நாங்கள் வந்தால் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிற மக்களுக்கான வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என கூறிவந்த தி.மு.க. அரசு, இப்போது மதுக்கடைகளை வீதிக்கு வீதி திறந்து வைத்தும் கூட கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாத, நிர்வாக திறனற்ற அரசாக மாறியிருப்பதை, கள்ளச்சாராயம் சம்பவம் காட்டுகிறது. 

கள்ளச்சாராயம் சம்பவம் போன்ற பாதிப்புகள் வரும்போது அதிகமாக பாதிக்கப்படுவது பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிற பட்டியல்இனத்தை சேர்ந்தவர்கள். இந்த அரசு சமூக நீதி பேசுகிற அரசு. இந்த அரசில் தான் அதிகமாக பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் மீது வன்கொடுமைகள் நடக்கிறது. அதிகமாக ஆணவ கொலைகள் நடக்கிற மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. பள்ளிக்கூட சிறுவர்கள் ஜாதி ரீதியாக மோதிக்கொள்கிற சூழல் இந்த சமூகநீதி பேசுகிற அரசில்தான் நடக்கிறது. ஆனால் இதுபற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்தவித அருகதையும் இல்லை என்பதுதான் எதார்த்தம், என்றார். கரூர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் குறித்து கேட்டபோது, யாராக இருந்தாலும் அவர்கள் சட்டரீதியாக வழக்கை சந்திக்க வேண்டும்” என்றார்.