×

வெயிலால் 5 பேர் உயிரிழந்துவிட்டதாக வாய் கூசாமல் சொல்கிறீர்களே! திமுக அரசை விளாசும் வானதி

 

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமான சாகச நிகழ்வில், அடிப்படை வசதிகளின்றி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்து பெரும் துயருற்றேன். இழப்பின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “1. சாகச நிகழ்ச்சியைக் காண வரும் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துதர தவறிய தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்அவர்களைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, பொது மக்களைக் குறைகூறுவதற்கு உங்களுக்கு உறுத்தவில்லையா திருமதி. கனிமொழி அவர்களே? 

2. “நடக்கவிருக்கும் விமான சாகச நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான துணைத் தளபதி திரு. பிரேம்குமார் முன்கூட்டியே தெரிவித்திருந்த போதும், கூடும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யாதது யார் தவறு? 

3. லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், போதுமான ஆம்புலன்ஸ் வசதிகள், முதலுதவி வசதிகள், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமையல்லவா? 

4. “சமாளிக்க முடியாத கூட்டங்கள் இனி கூடுவதை தவிர்க்கவும்” என பொதுமக்களிடம் கோரிக்கை வைக்கும் நீங்கள், 15 லட்சம் பேர் ஒரு இடத்தில் கூடுவதை முன்னமே கணக்கிட்டு, கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பல உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக முதல்வரின் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா?

5. வெப்பநிலையால் 5 பேர் உயிரிழந்துவிட்டதாக வாய் கூசாமல் சொல்கிறீர்களே, வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க பொதுமக்களுக்கு எந்த வசதியும் செய்துதராத தமிழக முதல்வர், குடும்பசகிதமாக கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு குளு, குளு பந்தலில் அமர்ந்து சாகச நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தாரே, இதுதான் உங்கள் கட்சியின் சமூகநீதியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.