அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரியின் மகன் துரை நயாநிதி அழகிரி. இவர் பிரபல தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த மங்காத்தா, தமிழ் படம் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில், துரை. தயாநிதி கடந்த மார்ச் மாதம் முதல் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. துரை தயாநிதிக்கு உடலில் மூளை வாத பிரச்சனை இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனை அலுவலக மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு நேற்றிரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வந்ததையடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.