×

தியேட்டர் வாசலில் மயங்கி கிடந்த சிறுவர்கள்- சட்டை பையில் குட்கா இருந்ததால் போலீஸ் அதிர்ச்சி

 

எடப்பாடி அருகே சினிமா தியேட்டர் வாசலில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்களுடன் மயங்கி கிடந்த 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் உள்ள கலையரங்கம் சினிமா தியேட்டர் வாசலில் இன்று காலை சுமார் 14 வயதிற்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் மயங்கிய நிலையில் நீண்ட நேரமாக படித்திருந்தனர். நேற்று (ஞாயிறன்று) இரவு முதலே அவர்கள் அப்பகுதியில் மயக்க நிலையில் படுத்திருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களை தட்டி எழுப்ப முயன்றபோது அவர்கள் தொடர்ந்து மயக்க நிலையிலேயே படுத்திருந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் எடப்பாடி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மயக்கத்தில் படுத்திருந்த மூன்று சிறுவர்களையும் எழுப்பி அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் உடன்பிறந்த சகோதரர்களான (தேவா (14), ராகவா (13), வினோத் - 10) ஆகிய மூவரும் பள்ளி மாணவர்கள் எனவும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெற்றோர்கள் கொங்கணாபுரம் சந்தை பகுதியில் சிக்குமுடி வியாபாரம் செய்து வருவதாகவும், அப்போது பெற்றோர்களுக்கு தெரியாமல் எடப்பாடி பகுதியில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததாகவும், தொடர்ந்து அங்கேயே படுத்து உறங்கியதாகவும் கூறியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிறுவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர்கள் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா (ஹான்ஸ்) பாக்கெட்டுகள், தீப்பெட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.