×

மூளைச்சாவு அடைந்த காதல் கணவரின் உடல் உறுப்புகள் தானம்! நிறைமாத கர்ப்பிணி கதறல்

 

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டிரோடு பசும்பொன்நகரை சேர்ந்தவர் தங்கபாண்டியன்(வயது 25). பேக்கரி மாஸ்டராக பணிபுரிந்த தங்கபாண்டியன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள ஸ்வீட் கடையில் வேலை பார்த்த போது, அந்தக் கடையின் உரிமையாளர் உறவினரான அம்ச ரேணுகாவை கடந்த வருடம் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டிருந்தார். 

தற்போது திருத்தங்கலில் இளம் தம்பதியினர் வசித்து வந்த நிலையில், அம்ச ரேணுகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 19-ம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட பட்சத்தில், வரும் 10-ம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே கடந்த 29- ம் தேதி தங்கப்பாண்டியன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது  நடந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்பாக  மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தங்கபாண்டியன் மூளை சாவடைந்தார். 

அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்ப அங்கத்தினர்கள் மன உறுதியுடனிருந்து முன் வந்து சம்மதம் தெரிவித்தனர்.அதனடிப்படையில் மதுரை தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல் உறுப்புகளை தானமாக பெற்றனர். அதனைத் தொடர்ந்து தங்க பாண்டியனின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக மதுரையிலி ருந்து திருத்தங்கலிலுள்ள மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. மயானத்தில் மூளை சா வடைந்த தங்கபாண்டிய னின் குடும்பத்தாரும், உறவினர்களும், நண்பர்களும் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தங்கபாண்டியன் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதன் காரணமாக, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர்வடிவேல், காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையத்துடன், மாலையணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

 மூளைச்சாவடைந்து உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துள்ள தங்கபாண்டியனின் இளம் மனைவிக்கு தமிழக அரசு சார்பாக உதவி கிடைக்க உறவினர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.