×

#BREAKING தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.. சரவன் ரூ.57,000ஐ நெருங்குகிறது.  

 

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 57,000 நெருங்கியுள்ளது.  நாளுக்கு நாள் புதிய உச்சமாக  தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.  

உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது.  தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில்  கனிசமாக ஏற்றம் கண்டுவருவதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி பட்ஜெட்டுக்கு பிறகான 5 நாட்கள் தங்கம் மளமளவென சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சிய வகையில்  அதன்பின்னர் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.  

அதிலும் கடந்த 2 வாரங்களில் கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ. 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  அதன்படி கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ. 960ம், கடந்த செப்.20ல் சவரனுக்கு  480 ரூபாயும்,  செப். 21 அன்று சவரனுக்கு 600 ரூபாயும்,  செப்.23 மற்றும் 24 ஆகிய 2 நாட்களில் தலா 160 ரூபாயும் என தொடர்ந்து ஏற்றம் கண்டது.  தொடர்ந்து செப்.25ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 480 அதிகரித்தது.  அன்றைய தினம் ஒரு கிராம் ரூ. 7,060க்கும், ஒரு சவரன் ரூ. 56,480க்கும் என்கிற அளவில் புதிய உச்சத்தை தொட்டது.  

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரே நாளில் மீண்டும்  அதிரடியாக  சவரனுக்கு மேலும்  ரூ.320  உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் மீண்டும்  ஒரு சவரன் ரூ. 56,800 என்கிற புதிய உச்சத்தை  எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து  ஒரு கிராம் ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

 வெள்ளி விலையும் அதிரடியாக  புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வரலாற்றில் இல்லாத அளவுக்கு  ஆபரணத் தங்கம் விலையும், வெள்ளி விலையும்  புதிய உச்சத்தை தொட்டிருப்பது, நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.