×

காவல்நிலையத்தில் மந்திரவாதிகளை அழைத்து வந்து மாந்திரீக பூஜை- திருப்பூரில் பரபரப்பு

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்ம பூஜை நடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சப் டிவிசனில் உள்ளது வெள்ளகோவில் காவல் நிலையம். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஞானபிரகாசம். திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட எல்லையில் இக்காவல் நிலையம் அமைந்துள்ளதால், குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கும்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் ஏற்பாட்டில் மந்திரவாதிகளை அழைத்து வந்து மர்ம பூஜை நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் காவல் நிலையத்தில் மர்ம பூஜை நடத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், காவல் உயரதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். அதில் பூஜைக்கு அனுமதி கொடுத்தது யார்? பூஜையில் கலந்து கொண்டவர்கள் யார், ஏற்பாட்டை செய்தவர்கள் உளவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் முன் கூட்டியே தகவல் அளிக்காதது ஏன்..? குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கேயம் அமைதிக்கான ஒருங்கிணைப்பு கூட்டமைப்பை சேர்ந்த திக, தபெதிக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பு மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்கள் அரசு விதிகளை மீறிய வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் மற்றும் அவருக்கு உடனடியாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர்