×

உடைந்து கிடக்கும் நாற்காலிகள்..  குப்பைக்காடான தவெக மாநாட்டுத் திடல்.. 

 

விஜய்யின் தவெக கட்சி மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் , மாநாட்டு திடல் பகுதியில் 3 டன் அளவிற்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.  

நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  இரவு 7.30 மணிக்கெல்லாம் மாநாட்டு நிகழ்ச்சிகள் முற்றிலுமாக நிறைவுபெற்ற நிலையில், மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீராக இன்று (அக்.28) அதிகாலை 3 மணியாகிவிட்டது.  இந்த மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றிருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது.  

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்தே மாநாட்டிற்கு வர இடமில்லாமல் போனது.  அந்த அளவிற்கு வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கத்தொடங்கின.  இதனால் தொண்டர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே மாநாட்டிற்கு வரத்தொடங்கினர்.  அதேபோல் மாநாடு முடிந்தவுடன் புறப்பட்ட வாகனங்கள் ஊர்ந்தபடியே சுமார் 4 மணி நேரம் சென்றது. யூ-டர்ன் கூட போட முடியாமல் திருச்சிக்கு  செல்ல வேண்டிய வாகனங்கள் கூட  திண்டிவனம் சென்று மூண்டும் அங்கிருந்து திரும்பி விழுப்புரம் வழியாக சென்றன.  இதனால்  அதிகாலை 3 மணிக்கு பின்பே போக்குவரத்து சீரானது.
 
இதனைத்தொடர்ந்து காலை 5 மணிக்குப் பிறகே  விழுப்புரம் - திண்டிவனம் வழியாக பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இவை எல்லாம் ஒருபுறமிருக்க,  மாநாட்டுத் திடலே குப்பைக்காடாக காட்சியளிக்கிறது.  மாநாட்டுக்கு வந்தவர்கள் பயன்படுத்திய லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், பிஸ்கெட் காகிதங்கள், உணவுப் பொட்டலக் காகிதங்கள் என  சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் இருந்தன. அத்துடன் மீதமான உணவுகளையும் ஆங்காங்கே வீசிச்சென்றதால்  அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மாநாட்டுத்திடலுக்கு வந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளையும் உடைத்து சேதப்படுத்திச் சென்றனர்.