×

 சென்னையில் பேருந்து நடத்துனர் கொலை; குடிபோதை பயணி கைது..

 

சென்னை அண்ணா ஆர்ச் அருகே அரசுப் பேருந்தில் இருந்து நடத்துனர் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் போதையில் இருந்த பயணி  கைது செய்யப்பட்டுள்ளார்.  

எம்கேபி நகர் - கோயம்பேடு மார்க்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்து 46Gல் நடத்துனராக பணிபுரிபவர் ஜெகன்குமார்(52). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.  மூத்த பெண் 10ம் வகுப்பும், இளைய மகள் 8ம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.  ஜெகன்குமார் நேற்று இரவு வழக்கம்போல  கோயம்பேட்டில் இருந்து எம்கேபி நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பணியில் இருந்துள்ளார்.  அப்போது கோவிந்தன்(65) என்கிற பயணி மதுபோதையில் பேருந்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.  அப்போது டிக்கெட் எடுப்பதில்  பயணி கோவிந்தனுக்கும்,  நடத்துனர் ஜெகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  

சென்னை அண்ணா ஆர்ச் அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது  தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், மோதலில் நடத்துநர் ஜெகன் பேருந்தில் இருந்த கம்பியில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் மற்ற பயணிகள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஆன்புலன்ஸ் வந்ததும் ஜெகன்குமார்   நடந்துவந்து பேருந்தில் ஏறியதாக தெரிகிறது. இருப்பினும் அவருக்கு மூக்கில் ரத்தம் வழிந்தபடியே இருந்ததால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  

தகவல் அறிந்து அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்துனர் ஜெகன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தாக்குதலில் ஈடுபட்ட பயணிக்கும் தலையில்  காயம் ஏற்பட்டதால் அவரும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரச்சினைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குடிபோதையில் பயணித்த கோவிந்தனையும் கைது செய்துள்ளனர். நடத்துடனர் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தால் மற்ற மாநகர பேருந்துகள் அந்த பகுதியில் இயக்கப்படவில்லை. அத்துடன் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.