×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

 

சனாதன தர்மம் குறித்த அவதூறு பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார்.  இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார்.  ஆனால் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி,  எனது தலையை சீவ பத்து கோடி? எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான வினீத் ஜிண்டால் என்பவர் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத சென்னை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.