×

கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து சித்திரவதை - சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை.. 

 

வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் நகைகளை திருடிவிட்டதாக கூறி, கைதி சிவகுமாரை சிறைதுறை அதிகாரிகள் சித்திரவதை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த சிவகுமார்,  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அந்த சிறையில் டிஐஜியாக இருந்த ராஜலக்ஷ்மி,  வீட்டிற்கு வேலை செய்வதற்காக சிவக்குமார் அழைத்துச் சொல்லப்பட்டிருக்கிறார். அப்போது ராஜலட்சுமி வீட்டில் இருந்து 4.25 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடியதாக கூறப்படுகிறது. தொடர்பாக விசாரணை நடத்தியதில் திருடிய பணத்தை கைதி சிவக்குமார் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அந்த நகைகளை மீட்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தின்போது சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் கைதி சிவகுமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.  

இது குறித்து தகவல் அறிந்த சிவகுமாரின் தாய்,  தனது மகனை திருடியதாகக் கூறி அவரை  சித்திரவதை செய்ததாக சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இதை தொடர்பாக வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் சிறைக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து அரசுக்கு வரும் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதனிடையே தற்போது சேலம் மத்திய சிறைக்கு சிவக்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று காலை சிபிசிஐடி எஸ்.பி., வினோத்  தலைமையில் சென்னை டிஎஸ்பி சசிதர்,  சேலம் டிஎஸ்பி சென்னித் இளங்கோ மற்றும் வேலூர் சிபிசிஐடி ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட 6  பேர் கொண்ட குழுவினர் சேலம் மத்திய சிறைக்கு சென்று கைது சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வேலூர் சிறையில் நடந்தது என்ன?, டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் அவர் எவ்வாறு வேலைக்கு அனுப்பப்பட்டார்? ,  அங்கு அவர் உண்மையாகவே திருடினாரா அல்லது வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா? ,  என்ன காரணத்திற்காக அவர் தாக்கப்பட்டார்?  என தொடர்ந்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து ரகசிய வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளனர்.  இரண்டு நாட்கள் இந்த விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.  தொடர்ந்து நாளை வேலூர் சிறையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். இந்நிலையில் வேலூர் சரக டிஐஜி ராஜலக்ஷ்மி உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில்   சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்