குழந்தைகளை தாக்கும் சந்திபுரா வைரஸ்- இந்தியாவில் 16 பேர் உயிரிழப்பு, 50 பேர் பாதிப்பு
இந்தியாவில் சந்திபுரா வைரஸ் தொற்றால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி நாடெங்கும் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியதின் வடுவே இன்னமும் நீங்காத சூழலில், மக்களிடையே புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது சந்திபுரா வைரஸ் நோய் தொற்று….. 1960-களில் முதல்முறையாக மகாராஷ்டிரா சந்திபுரா பகுதியில் தான் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால், இதற்கு சந்திபுரா வைரஸ் என பெயர் வைக்கப்பட்டது. 2010ல் முதல்முறையாக தமிழ்நாட்டிலும் சந்திபுரா தொற்று உறுதியானதாக தரவுகள் கூறுகின்றன.
தற்போது குஜராத்தில் இந்த சந்திபுரா வைரஸ் நோய் வேகமாக பரவுவதாலும், அடுத்தடுத்த ஏற்படும் குழந்தைகளின் உயிரிழப்புகளாலும் நோய் தொற்று மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், மணற்உன்னி மற்றும் ஈ வகைகளில் இருந்தே இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவுகின்றன. குறிப்பாக பெரியவர்களை விட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இதனால் இந்த வைரஸ் குழந்தைகளை தொற்றினால் உடல்நல பாதிப்பு தீவிரமாக இருக்கும் எனவும் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளது. அதேபோல வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் இந்த வைரஸ் நோயால் தீவிர பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த வைரஸ் நோய் கொரோனா போல ஒரு மனிதரிடமிருந்து நேரடியாக மற்றொருவருக்கு பரவாது. சளி, தும்மல், இருமல் மூலம் அருகில் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் பரவாது. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தை குடித்த மணல் ஈ அல்லது கொசு மற்றொருவரை கடிக்கும் போது மட்டுமே இந்நோய் பரவும். இந்த நோய் தொற்றிய அடுத்த 48 மணி நேரத்தில் அதீத காய்ச்சல் ஏற்படுவது, வலிப்பு , வயிற்றுப்போக்கு வாந்தி , கடுமையான தலைவலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதன் வைரஸ் தீவிரம் மூளை வீக்கதை ஏற்படுத்தக்கூடும் எனவும் இதனால் கோமா நிலைக்கு செல்வது, பக்கவாதம் ஏற்படுவது மட்டுமின்றி உடனடி சிகைச்சை எடுக்கத் தவறினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளது என்கின்றனர்.
தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சந்திபுரா வைரஸ் தொற்று பதிவாகவில்லை என்றாலும் அனைத்து மாவட்டங்களிலும், எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் வட மாநிலங்களில் இருந்து பணிக்காரணமாக இங்கு வந்தவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு என சிகிச்சைக்கு வந்தால் உரிய சோதனைகள் செய்யவும் , அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சுகாதாரமற்ற திறந்த வெளியிலும் மணற் பரப்புகளிலும், அடர் செடி கொடிகள் இருக்கும் பகுதிகளில் சிறுவர்கள் விளையாட செல்வதை தவிர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கொசு வளர்வது போன்று சுகாதாரமற்ற சூழல் இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும் , காய்ச்சல் போன்ற மேல் குறிப்பிட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அதேநேரத்தில் தேவைற்று பீதியடைய வேண்டாம் எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.