×

முடிந்தது புரட்டாசி! 42 நாட்களுக்கு பிறகு முட்டை விலையில் மாற்றம் 

 

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.05  ல்  இருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ.5.10 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (21-102024) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (22-10-2024) காலை முதல் அமலுக்கு வருகிறது. 42 நாட்களுக்கு பிறகு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முட்டை யின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.