×

குற்றாலத்தில் நாளை தொடங்குகிறது சாரல் திருவிழா! எத்தனை நாட்கள் தெரியுமா?

 

குற்றாலத்தில் நான்கு நாட்கள் நடக்கும் சாரல் திருவிழா நாளை காலை மலர் கண்காட்சியுடன் துவங்குகிறது.

தென்காசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வர். சுற்றுலா தலமான குற்றாலத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் அரசு சார்பில் ஆண்டுதோறும் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். வழக்கமாக ஒரு வாரம் நடக்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு நான்கு நாட்கள் மட்டுமே நடக்கிறது. மேலும் சிறப்பம்சமாக ஐந்தருவின் மேல் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் மலர் மற்றும் காய்கறி,  வாசனை திரவியங்கள் கண்காட்சி நடக்கிறது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைக்கிறார்.

சாரல் திருவிழாவை ஒட்டி அருவி கரையில் நிறம் மாறும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிர்கிறது. முதல் நாள் ஆரோக்கிய குழந்தை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் செல்லப்பிராணிகள் கண்காட்சியும் படகு போட்டி, ஆணழகன் போட்டி கோலப்போட்டி மாரத்தான் போட்டிகளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.