×

சென்னை அசோக் நகர்  பள்ளி தலைமை ஆசிரியை  பணியிட மாற்றம்

 


ஆன்மீக சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த நிலையில், அசோக் நகர் காவல் உதவி ஆணையர் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார். 

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல் ஸ்பீச்  வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு  மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக,  ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  .

 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார்.  4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார். ஆன்மீக சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த நிலையில், அசோக் நகர் காவல் உதவி ஆணையர் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் sஎய்யப்பட்டுள்ளார். பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது