×

பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி- சென்னை நீதிமன்றம்

 

பொது வினியோக திட்டத்திற்காக 6 கோடி பாக்கெட் பாமாயில் கொள்முதல் மற்றும் பருப்பு கொள்முதல்  செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்க முடியாது என   சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்குவதற்காக, ஒரு லிட்டர் அளவில் 6 கோடி பாக்கெட்கள் பாமாயில் கொள்முதல்,60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பாக நவம்பர் 8ம் தேதி மின்னணு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்ட விதிகளின்படி, 2 கோடி ரூபாய் வர மதிப்பிலான டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். 2 கோடி ரூபாய்க்கு மேலான டெண்டர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பாமாயில் டெண்டருக்கு விண்ணப்பிக்க நவம்பர் 22ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, சட்ட விதிகளுக்கு எதிரானது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், வரும் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்காக குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்ட விதிகள் அனுமதி வழங்குவதாக குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அவசர தேவைக்காக குறுகிய கால டெண்டர் கோர விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று தான் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.