×

சென்னை மெட்ரோவில் ஆகஸ்டில் மட்டும் 95.43 லட்சம் பயணிகள் பயணம்.. 

 


மெட்ரோ ரயிலில் பயணித்த  பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும்  95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 

மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 8,606 பயணிகள் கூடுதலாக மெட்ரோ இரயில்களில்  பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும்,  ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும்  மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும்  மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2024 அன்று 3,69,547 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 

2024, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,42,595 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 16,026 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,050 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,97,858 பயணிகள் (Online QR 1,82,229; Paper QR 22,55,079; Static QR 2,65,545; Whatsapp - 5,54,218; Paytm 4,54,875; PhonePe – 3,36,152; ONDC – 49,760), மற்றும்   சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,81,096 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.