இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
சென்னையில் இன்று இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள 7வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இதே மைதானத்தில் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி அடைந்துள்ள சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, தனது வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய குஜராத் அணி, அதே உத்வேகத்துடன் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்து வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக சென்னையில் இன்று இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 11 மணிக்கு மேல் 27ஆம் தேதி அதிகாலை 01:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பதை CMRL தெரிவித்துக்கொள்கிறது. மேலும் பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்காக ஆன்லைனில் (CMRL mobile App, Paytm app, Phonepe app, WhatsApp, ONDC etc ) மூலம் பயணச்சீட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.