×

“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம்”- காவல் ஆணையர் 

 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீதம் விசாரணை முடிந்தது அடுத்த வாரம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல்துறை ஆணையர் அருண் பதவி ஏற்ற பிறகு சென்னை காவல்துறையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “சென்னையில் பல நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீதம் விசாரணை முடிந்து விட்டது. அடுத்த வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்து. இந்த வழக்கில் இன்னும் 3 முக்கிய ரவுடிகள் பிடிபடவில்லை. தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்போ செந்தில் விரைவில் கைதாவார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் பொருளாதார ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உதவி ஆணையர் அகஸ்டின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் மற்றும் குற்றம் புரிபவர்களுக்கு குற்றத்தை செய்த பிறகு சட்ட ரீதியான உதவிகளை வழக்கறிஞர்கள் செய்யலாம். ஆனால் குற்றத்தை செய்வதற்கே உதவியாக இருக்கும் வகையில் சட்ட உதவிகளை உடந்தையாக இருந்தால் வழக்கறிஞர்களும் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இதுபோன்று ஏற்படும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் சுமார் 153 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு பல்வேறு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக போதைப்பொருள் நடவடிக்கையை தடுப்பதற்கு தீவிரமாக செயல்பட உள்ளோம். சென்னையில்  உதவி ஆணையர் தலைமையில் புதிய சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.