×

சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து..!

 

ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  வரும்25-ம் தேதி  படப்பிடிப்புகள்  ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்தார். 20 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்த ஏழுமலை, மார்பு பகுதியில் அடிபட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  இதையடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) வரும்25-ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருகிறது. இதனால் சென்னையில் மட்டும்  அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து  பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவது இல்லை. அதனால் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 25-ம் தேதி கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்துகிறோம். அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ளூர் படப்பிடிப்புகள் (சின்னத் திரை, பெரியதிரை) நடைபெறாது.

இக்கூட்டத்தில், திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கம், சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் சங்கம், சண்டை இயக்குநர்கள், கலைஞர்கள் சங்கம், நடன இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், செட்டிங் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய 5 சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.