×

சிக்னல் கோளாறு- சென்னை புறநகர் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

 

மீஞ்சூர் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னை மார்க்கத்தில் 2வது முறையாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் அடுத்தடுத்து பழுது காரணமாக ஒரே நாளில் 2வது முறையாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மீஞ்சூர் - அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி என அடுத்தடுத்து ரயில்கள் அணிவகுத்து நின்றன. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் விரைந்து தண்டவாள விரிசலில் சீரமைப்பு பணிகளை முடித்ததை தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் சென்னை நோக்கி புறப்பட்டன. இதனிடையே மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளங்கள் பிரியும் இடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக மீண்டும் சென்னை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை பழுது காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து புறநகர் ரயில்களில் பயணித்த பயணியர் ரயிலில் இருந்து கீழே குதித்து தண்டவாளங்களில் இறங்கி நடந்து மீஞ்சூர் ரயில் நிலையம் நோக்கி செல்ல துவங்கினர். அங்கிருந்து ஷேர் ஆட்டோ, பேருந்துகள் மூலம் சென்னைக்குச் சென்றனர். 

இதனிடையே மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்டு ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை நோக்கி இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தண்டவாள விரிசல், சிக்னல் கோளாறு என அடுத்தடுத்து ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இருவழிப்பாதையாக உள்ள சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தை 4வழிப் பாதையாக மாற்றிட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவு ரயில்களும், புறநகர் ரயில்களும் ஒரே பாதையில் இயக்கப்படுவதால் குறித்த நேரத்தில் ரயில்கள் சென்றடைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. உடனடியாக சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தை முழுமையாக நான்கு வழிப் பாதையாக மாற்றி ரயில்களை குறித்த நேரத்தில் இயக்கி பயணிகளின் சிரமத்தை குறைத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.