×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 40/40 ‘தென் திசையின் தீர்ப்பு’ நூல் வெளியீடு.. 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘தென் திசையின் தீர்ப்பு’ என்ற நூல், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.  

சென்னை அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கில், இன்று காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய, நாடாளுமன்றத் தேர்தல் 2024   ‘40/40 தென் திசையின் தீர்ப்பு’ என்கிற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.  நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி  வெற்றிபெற்றது குறித்து இந்த புத்தகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.    

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெற்ற வெற்றியை ஆவணமாக பதிவு செய்து,  வரலாற்று தேர்தல் ஆவண நூலாக இது கருதப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்த பிரதமர் மோடியை,  அம்பேத்கரின் அரசியல் சாசன சட்ட புத்தகத்திற்கு முன்பாக தலை குனிந்து வணங்க வைத்திருக்கிறது  திமுகவின் இந்திய கூட்டணி என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற சரித்திர சாதனை ஆவணமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் ‘தென்தசையின் தீர்ப்பு’ என்கிற நூலை எழுதியதாக கூறப்பட்டுள்ளது.  

இந்தப் புத்தகத்தில் மக்களவைத் தேர்தலில் 40/40 வெற்றியை திமுக கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது?,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம் என்ன? , 2023ல் இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏவில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பாட்னா, பெங்களூரு,  மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டங்கள்,  திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்குகள்,  கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடந்த தொகுதி பங்கீடு,  திமுகவின் தேர்தல் அறிக்கை,  மாவட்ட செயலாளர்கள் பற்றிய விவரங்கள்,  முதல்வரின் பரப்புரை மேற்கொண்ட இடங்கள்,  பல்வேறு ஊடகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு பேட்டிகள் என அனைத்துமே இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

அத்துடன் கருத்துக்கணிப்புகள், சரித்திர வெற்றி பெற்ற தேர்தல் முடிவுகள்,  தேர்தல்கள் புள்ளி விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை குறித்தும் ‘தென் திசையின் தீர்ப்பு’ என்கிற நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.