×

நீச்சல் குளத்தில் மூழ்கி ஒன்றாம் வகுப்பு மாணவன் பலி

 

புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் நீச்சல் குளத்தில் மூழ்கி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் ஆந்திரம் அருகே உள்ளது. இங்கு அக்ரஹாரம் என்ற பகுதியிலுள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பினை சாய் ரோகித் (7) படித்தார். அவர் வழக்கமாக வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருவது வழக்கம். இன்று  மதிய உணவுக்கு சிறுவன் வீட்டுக்கு வராததால் பெற்றோர் பள்ளிக்கு தேடி வந்தனர். அங்கு அவன் காணப்படவில்லை. இதையடுத்து பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பள்ளி அருகேயுள்ள பாலயோகி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தில் அச்சிறுவன் கிடந்துள்ளான்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவனது உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மண்டல நிர்வாகி அலுவலகத்தில் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக  நிர்வாகி முனுசாமி உறுதி தந்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.