×

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

 

சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று கனமழையையொட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.10.2024) சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று,  சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி, காணொலிக் காட்சி வாயிலாக  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்  எஸ்.எம்.நாசர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தொடர்ந்து இருநாட்கள் கனமழை பெய்யவுள்ளதால் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், இலவச அழைப்பு எண் (Toll Free Number) ஆகியவற்றை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும், கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சென்று அழைத்து அவர்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அறிவுறுத்தியதோடு, முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் குறித்து கேட்டறிந்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரையும், மழையால் வீழ்ந்துள்ள மரங்களை   அகற்றிடவும்  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், உணவு வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து, அவர்களிடம் கவலைப்பட வேண்டாம், அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதரும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.