மக்களுடன் முதல்வர் : ஆலோசனை கூட்டத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு..
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு அரசின் சார்பில் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக நகர் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும், மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். வெற்றிகரமாக நகரப் பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம் அண்மையில், ஊரக பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும், கோரிக்கை மனுகள் பெறப்படும் நிலை, சிறப்பு முகாம்கள் உள்ளிட்டவை குறித்தும் மதுரை, தூத்துக்குடி, நாகை, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார். மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அதிகாரி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.