×

இடிந்து விழுந்த மருத்துவ கல்லூரி விடுதி! சென்னையில் பரபரப்பு

 

சென்னை பாரிமுனையில் பழமையான மருத்துவ மாணவர்கள் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.


சென்னை டிஎன்பிஎஸ்சி சாலையில் அமைந்திருக்கும் மருத்துவ மாணவர்கள் முதுகலை மாணவர் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. சுமார் 60 வருட கட்டிடத்தில் தரை தளம் உட்பட மூன்று மாடி கட்டிடம் அமைந்துள்ளது. உயர் நீதிமன்ற வளாகம் இந்த பகுதியில் கட்டப்பட இருக்கிற காரணத்தினால் இடிக்கும் பணி என்பது மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக இந்த பணியை மேற்கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் பிடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இன்று காலை திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு அந்த கட்டிடத்தின் ஓரமாக சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக விசுவநாதன், சொக்கலிங்கம், லட்சுமணன் ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களை ஆட்டோ மூலமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவல் அறிந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடுப்பாடுகளில் யாரும் சிக்கி உள்ளார்களா என்று தீவிரமாக சோதனை செய்தனர்.  மேலும் அருகில் இருக்கும் பூக்கடை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனை செய்ததில் வேறு யாரும் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கவில்லை என தெரிய வந்தது. இந்நிலையில் பாரிமனை பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வந்திருந்தார். அருகிலேயே விபத்து நடந்த இடம் இருந்ததால் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.