×

ஓயோ லாட்ஜில் தங்கி இருந்த மைனர் ஜோடி! திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த பெண்

 

கும்பகோணத்திற்கு பூம்புகாரில் இருந்து வந்த 17 வயது கல்லூரி மாணவனும், 17 வயது கல்லூரி மாணவியும் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது பெண்ணிற்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார்.

கும்பகோணத்திற்கு உறவினர்களான மதுக்கூரை சேர்ந்த17 வயது கல்லூரி மாணவியும் (மன்னார்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்) மயிலாடுதுறை பூம்புகாரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் (மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி சி ஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்). இவர்கள்  கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று மதியம் 12 மணியளவில்  அறை எடுத்து தங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே அந்தப் மாணவன் அறையில் இருந்து ஓடி வந்து அந்த லாட்ஜில் இருந்தவர்களிடம் , வந்த பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுங்கள் என கூறியதாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து அந்த தங்கும் இடத்திலிருந்து  அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவர்கள்  பரிசோதனை செய்யும் போது அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவிக்கவே காவல்துறையினருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த  பெண்ணின் உடலை உடல்கூறு ஆய்விற்காக  பிணவறைக்கு கொண்டு சென்றனர். காவல் துறையினர்  இந்த சம்பவம் குறித்து தடய அறிவியல் துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் தங்கும் விடுதி மற்றும் இறந்த பெண்ணின் உடலில் உள்ள  தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத்  நேரில்  ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். 

  
முதல் கட்ட  விசாரணையில் இருவரும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், கும்பகோணத்திற்கு அந்த பெண் வந்ததும் மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொள்ள அறை எடுத்து தங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே  இறப்பிற்கான உண்மை காரணம் தெரிய வரும்.