நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு தரப்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்..!
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் மழையால் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்து சேதமடைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் 13 ஆயிரத்து 749 ஹெக்டேர் அளவில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 947 ஹெக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 3300 ஹெக்டேரும், நாகை மாவட்டத்தில் 7681 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 958 ஹெக்டேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 822 ஹெக்டேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேர் அளவிற்கு கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
முதல் கட்ட கணக்கீட்டில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது. தண்ணீர் வடியாததால் பயிர்கள் மூழ்கியுள்ளது. தற்போது வேளாண் துறை அதிகாரிகள், துறை அதிகாரிகள் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 33 சதவீதம் அளவுக்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
அதிகமாக மழை பெய்தால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளையும் பாதிப்பு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இதுதவிர அந்தந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் யாரும் செய்யாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தான் ‘சி’ அண்ட் ‘டி’ வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அதுவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கோடை காலத்தில் தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்கு பட்ஜெட்டிற்கு முன்பே அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.75 கோடி அளவுக்கு தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது, என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த ஆய்வின்போது கல்யாணசுந்தரம் எம்.பி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த், மாவட்ட ஆட்சியர் பிரியங்காபங்கஜம், எம் எல் ஏ துரை சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, துணை இயக்குனர்கள் சுஜாதா, அய்யம்பெருமாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.