×

விஜய் மீது நடவடிக்கைக் கோரி தேர்தல் அலுவலரிடம் பகுஜன் சமாஜ் கட்சி புகார் 

 

நடிகர் விஜய் மீது நடவடிக்கைக் கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம்  பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் நடிகர் விஜய் ஆகஸ்ட் 22 அறிமுகம் செய்து வைத்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. இதனிடையே த.வெ.க கொடியில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாக சென்னையை சேர்ந்த ஆர்.டி.ஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது புகார் அளித்தார். 

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மீது நடவடிக்கைக் கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம்  பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை அரசியல் நாகரீகம் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் பயன்படுத்தி இருக்கும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டு்ம் என புகாரில் பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.