×

இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார்.. 

 

இயக்குனர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடலூர் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.  கடலூரில் இரு தினங்களுக்கு முன் தனியார் பேருந்து ஓட்டுநருடன் இயக்குனர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

கடலூர் -  புதுச்சேரி வழித்தடத்தில் நாள்தோறும் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்தி அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு சில பேருந்துகள் செல்கின்றன. இந்த நிலையில்  கடந்த இரு தினங்களுக்கு முன்பு இயக்குநர் சேரன் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி காரில் சென்றுள்ளார்.  பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நீண்ட நேரமாக அதிக அளவில் ஒலி எழுப்பிய வண்ணம், ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது. 

அந்த தனியார் பேருந்துக்கு வழிவிட இடம் இல்லாததால், பேருந்துக்கு முன்னால்  சேரனின் கார் சென்று கொண்டிருந்து. பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் ஒலியை எழுப்பிக்கொண்டே வந்ததால், கோபமடைந்த சேரன் காரை நிறுத்தி அந்த பேருந்து ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஒதுங்குவதற்கு வழி இல்லாத சாலையில்,  அதிக ஹாரன் எழுப்பி எதற்கு மக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள்;   எப்படி ஒதுங்கி உங்களுக்கு வழிதர முடியும் என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநருக்கும், இயக்குநர் சேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

அதனைத் தொடர்ந்து  அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்தில் வந்த பேருந்து நடத்துனர்கள் இறங்கி இயக்குநர் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து இந்த பகுதியில் செல்லும் போதெல்லாம் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பி செல்வதாகவும்,  இதற்கு போக்குவரத்துக் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேரன் கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது இயக்குநர் சேரன் மீது கடலூர் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.