×

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமை என புகார்

 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கல்லூரியில் ராகிங் கொடுமை என புகார் எழுந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் ஆலன் கிரைசோ (வயது 21). இவர் நேற்று  இரவு பழைய ஆண்கள் விடுதியில் உணவருந்தி விட்டு வரும்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் கவின், தியானேஷ் ஆகிய இருவரும் ஆலனை அழைத்துள்ளனர். 2023-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களை மீட்டிங் இருக்கிறது எனக்கூறி அழைத்துவா... அவர்களை ராகிங் செய்ய வேண்டும் என ஆலனிடம் கூறியதாக தெரிகிறது. அப்போது ஆலன் மெதுவாக நடந்து சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவின் , தியானேஷ் இருவரும் ஆலனை கூப்பிட்டு,  “சீனியர்கள் சொன்னதை செய்ய மாட்டாயா? தெனாவட்டாக பார்க்கிறாய்” என கன்னத்தில் அறைந்துள்ளனர். மேலும் தியானேஷ், பீர் பாட்டிலால் ஆலனின் தலையில் அடித்துள்ளார். இதில் ஆலனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு, ஆலனை தலை முடியை பிடித்து தர தரவென இழுத்துச் சென்ற தியானேஷ் தனது பேட்ச் மாணவர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். போதை தலைக்கேறியதால் விடுதியில் இருந்த கதவு, கட்டில், ஜன்னல் என கண்ணில் தென்பட்டதையெல்லாம் தியானேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

விடுதியில் இருந்த மாணவர்கள் மற்றும் காவலாளிகள் தியானேஷ் தலைமையிலான போதை மாணவர்களை ஒருவழியாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை RMO வாணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆலனின் தந்தையும் நெய்வேலி என்எல்சி அதிகாரியுமான ஜோஸ் ஜேக்கப் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான மருத்துவ மாணவர் ஆலன் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விடுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.