×

பாராட்டு மழை பொழிந்தீங்க..  ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி.. 

 


கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட  ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

கலைஞரின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.   இதன் ஒரு பகுதியாக கலைஞரின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.   இந்த நாணயத்தை வெளியிடுவதற்காக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார்.  முதலாவதாக  மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர்,  தொடர்ந்து கலைஞர் நினைவிடம் அருகே உள்ள  கலைஞரின்  டிஜிட்டல் அருங்காட்சியகத்தையும்  பார்வையிட்டார்.  

பின்னர் கலைவாணர் அரங்கில்  கலைஞர் உருவம் பொருத்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அமைச்சர் ராஜ்ராத் சிங்  வெளியிட அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழில் ‘வணக்கம்’ என்று கூறி தனது உரையை தொடங்கினார்.  அப்போது  இந்தியாவில் மிகப்பெரிய தலைவரான கலைஞருக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் படியும் கேட்டுக் கொண்டார். இது திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

இந்நிலையில்  ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது  X தளத்தில் பதிவில், “கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளொயிட்டு கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்தீர்கள். கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்துள்ளீர்கள். தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்திய தங்களுக்கு  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.