×

கள்ளச்சாராயச் சாவுகளுக்கு காவல்துறை உயரதிகாரிகளே பொறுப்பு- செல்வ பெருந்தகை

 

இனிவரும் காலங்களில் இதுபோன்ற கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கள்ளச்சாராயச் சாவுகள் நடைபெற்றால் அந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்திய 12 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேரும் மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதுபோன்ற கள்ளச்சாராய மரணங்களில் ஏழை, எளிய வறுமையில் உள்ள குடும்பத்தினரே பெரும்பாலோனோர் பலியாகின்றனர் என்பது கவலைக்குறிய செய்தியாகும். இவை உடனடியாக தடுக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட இரு மாவட்ட மக்களையும் மருத்துவமனைகளில் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அவர்களுக்கு தரமான சிகிச்சை செய்வதற்கும் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம்  நிவாரண உதவி அறிவித்துள்ளார்.  உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவ்விஷயத்தில் செயலாற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து உத்திரவிடப் பட்டுள்ளது சரியான நடவடிக்கையாகும். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் குற்றவாளிகள் தப்பமுடியாது. 

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தக்க விழிப்புடன் இருந்து, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கள்ளச்சாராயச் சாவுகள் நடைபெற்றால் அந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.