×

பிரதமருக்கு அதானியுடனான ஊழலில் தொடர்பு உள்ளது- ஜோதிமணி எம்பி

 

ஆ என்று சொன்னாலே அவையை ஒத்தி வைத்து விடுகிறார்கள், பிரதமருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி, “அதானி பிரச்சினையை பொறுத்தவரை இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. அதானி ஒன்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது. இந்திய அரசாங்கத்தின் சட்டத்திற்கு உட்பட்டவர் தான் அதானி. அதனால் அதானையை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். பிரதமருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. நாடாளுமன்றத்தில் அதானி என்று கூட இல்லை... ஆ என்று சொன்னாலே அவையை ஒத்தி வைத்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு வெளிப்படையாகவே அதானியை காப்பாற்றும் போக்கு உள்ளது. இந்தியாவில் விமான நிலையங்கள், அலைக்கற்றைகள், நிலக்கரி, மின்சாரம் இவை அனைத்தும் ஒரே ஒரு நிபந்தனையும் பின்பற்றாமல் ஆர்டர் கிடைக்கிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி போராடி வருகிறது” என்றார்.

தொடர்ந்து விஸ்வகர்மா திட்டத்தின் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த  ஜோதிமணி, “சாதியை ஒழிப்பதற்கு தான் நாம் போராடி வருகிறோம், காலம் காலமாக பெரியார் காமராஜர் அண்ணா உட்பட அனைவரும் எதை ஒழிக்கப் போராடினார்களோ அதை பாரதிய ஜனதா அரசு கொண்டுவர முயற்சிக்கிறது .அதனை தமிழ்நாடு உட்பட முற்போக்கான மாநிலங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது” என பதிலளித்தார்.