×

அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

 

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், “உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலத்தின் அமைச்சரை ஒரு சாமியார் மிரட்டுவதை நாடும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. பாரத் / பாரதம் என்ற பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை. ந்தியாவை பாரதம் என மாற்றினால் பல்வேறு அசவுகரியம் ஏற்படும். 

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. சனாதனம் என்பது சமுதாயத்தில் உள்ள சாதியை ஏற்றத்தாழ்வுகளையே குறிக்கிறது. இறை வழிபாட்டிற்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாட்டில் யாரும் பேசவில்லை. சாதிகள் இல்லாமல் சமுதாயம் அமைய வேண்டும் என்றுதான் உதயநிதி கூறினார். அவரது கருத்துக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்” என்றார்.

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.