×

 ‘கவுன்சிலர்கள் தவறு செய்தால் பதவிபறிப்பு’ - மா.செக்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.. 

 


கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைளை உடனடியாக எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.  

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.  
இதில் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள்,  திமுக தலைமை கழக நிர்வாகிகள், திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும்  கலந்துகொண்டனர்.  

இன்றைய கூட்டத்தில்  மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் மாவட்ட செயலாளர்களுக்கு  பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அதாவது,  “கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.   

சில மாவட்ட செயலாளர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் புகார்கள் வந்துள்ளன. அவை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.  

ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும், அரசையும், கட்சியையும் கவனித்துக் கொண்டிருப்பேன்.  

அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர்; வெற்றி பெறுபவரே வேட்பாளர்.  

அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.   

தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டார் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அவ்வளவு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். ” என்று  அறிவுறுத்தியுள்ளார்.