×

மருத்துவப் படிப்புக்கான 7.5% ஒதுக்கீடு பிரிவுக்கு இன்று கலந்தாய்வு!

 


இளநிலை மருத்துவப்படிப்புக்கான 7.5% ஒதுக்கீடு பிரிவுக்கு இன்று (ஆக.22) கலந்தாய்வு நடைபெறுகிறது. 

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு,  மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு  நேற்று (ஆகஸ்ட் 21 ஆம் தேதி) தொடங்கியது.  தொடர்ந்து வருகிற  29 ஆம் தேதி வரை  கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.  மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும்,  3-வது சுற்று கலந்தாய்வு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் சேர 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் படி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தக் கலந்தாய்வு மூலம் நாடு முழுவதும் உள்ள 710  மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரம்  மருத்துவ இடங்களும்,  21,000 பல் மருத்துவ இடங்களுக்கும் நிரப்பப்படுகின்றன. 

அதன்படி நேற்று (ஆக.21) சிறப்பு பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து இன்று ( ஆக.22) சிறப்பு மற்றும் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5% உள்ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.  காலை 10 மணிக்கு  கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில், முன்னதாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு காலை 8 மணி முதல் 9 மணி வரை கலந்தாய்வு நடக்கிறது.