×

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதலைக் கண்டித்து கண்டன பரப்புரை!

 

இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதலைக் கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ,    இனவெறி பிடித்த இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை அடியோடு அழித்து விட வேண்டுமென்று வெறித்தனமானத் தாக்குதலை அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. இந்த மனிதாபிமானற்ற தாக்குதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் படுகாயமுற்று உயிருக்குப் போராடி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து அகதிகளாக அலைந்து வருகின்றனர்.

                அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் ராணுவத் தாக்குதல் போர் நியதிகள் அனைத்தையும் நிராகரித்து பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புகள் என நாடு முழுவதும் இடைவிடாது  குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் உட்பட பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

                தாயக உரிமைக்காகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு இந்திய நாடு ஆரம்ப காலத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த வழிவழியான சமாதான ஆதரவு நிலையில் இருந்து பாஜக ஒன்றிய அரசு முற்றிலும் மாறுபட்டு, அமெரிக்க அரசோடும், அதன் வழி இஸ்ரேலுடன் இணைந்து நின்று பாலஸ்தீன மக்களை கொன்றழிக்கும் கொடுங்குற்றத்துக்கு  துணை போகிறது.

                ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்த தீர்மானத்தை ஆதரிக்காமல் பாஜக ஒன்றிய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலை எடுத்தது.  இந்த நிலையில் அமெரிக்க அரசின் செயலாளரும், பாதுகாப்புத்துறை செயலாளரும் இந்தியா வந்து - நமது ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் அயலுறவுத்துறை அமைச்சகங்கள் மட்டத்தில்  07.11.2023 முதல் 10.11.2023 வரை

(2 ஒ 2) பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

                இதில் பாஜக ஒன்றிய அரசு இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும். அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ராணுவ ஆயுதங்கள், நிதியுதவிகள் நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மிகப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய போர் நிறுத்தம் உடனடியாக ஏற்கப்ப்பட வேண்டும்.

                ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பாலஸ்தீனர்களின் நீண்ட போராட்டத்துக்கு தீர்வாக முன்மொழிந்துள்ள இரு நாடுகள் கொள்கை ஏற்கப்பட்டு, 1967க்கு முந்தைய நிலையில் மேற்கு ஜெருசலேத்தை தலைமையிடமாக கொண்டு சுதந்திர நாடாக பாலஸ்தீனம் ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பொதுமக்களிடம் 14.11.2023 முதல் 16.11.2023 வரை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டார அளவில் பரப்புரை இயக்கம் நடத்துவது என்றும், 20.11.2023 தலைநகர் சென்னையில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                நாட்டின் அயலுறவு கொள்கையைப் பாதுகாக்க நீடித்த சமாதானம் நிலவ வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி நடைபெறும் பரப்புரை இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென இடதுசாரி கட்சிகள் அழைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.