×

மேலும் தாமதமாகும் புயல்...மணிக்கு 2 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது!

 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் புயல் உருவாவதில் மேலும் தாமதமாகியுள்ளது. 

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரைக்கால் மாமல்லபுரம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் உருவாக மேலும் தாமதமாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த நில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேரிடர் மீட்பு படையினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.