×

தீவிர புயலாக 12கி.மீ வேகத்தில் நகரும் டானா..!!

 

மத்திய வங்கக்கடலில் உருவான டானா புயல் தீவிர புயலாக மாறி மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.    

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  அக்.21ம் தேதி  காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி,  மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து  22ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.  தொடர்ந்து  நேற்று காலை  (23ஆம் தேதி) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் டானா புயலாக வலுப்பெற்றறு. 

இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து,  24-ஆம் தேதி (இன்று)  காலை  தீவிர புயலாக  வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில்  மையம் கொண்டுள்ளது.   மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த டானா தீவிர புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12கிமீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக டானா புயல் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் நகரும் வேகம் சற்று குறைந்தது. ஒடிசாவின் பூரி தீவிற்கு 260 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும், ஒடிசாவில் தமாராவிற்கு 290 கிலோமீட்டர் தெற்கு - தென்கிழக்கிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு 350 கிலோ மீட்டர் தெற்கிலும் தீவிர புயல் மையம் கொண்டுள்ளது

 இது,  வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள  கடற்கரை பகுதிகளில், பூரி  - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை (25 ஆம் தேதி) காலை கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் அப்பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.