புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 2ம் நாள் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி..
இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 2ம் நாள் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டின் 77 வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். சுதந்திர தின விழாவை ஒட்டி காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் இதற்காக ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்நிலையில் 77வது சுதந்திர தின விழா ஒத்திகை முதல்கட்டமாக ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ( ஆகஸ்ட் 9) மற்றும் இறுதியாக 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த தேதிகளில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்வுக்காக நேப்பியர் பாலம் - போர் நினைவுச்சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது.