×

மின் ஊழியர் உயிரிழப்பு: அரசு அறிவித்த ரூ.3 லட்சம் இழப்பீடு போதாது - ராமதாஸ் அரசுக்கு வைத்த கோரிக்கை..

 

ஜெயங்கொண்டத்தில் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியருக்கு  அரசு அறிவித்த ரூ.3 லட்சம் இழப்பீடு  போதாது எனவும்,  ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 இதுகுறித்து தனது  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  ஒன்றியம் கல்லாத்தூரைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் செந்தில்குமார் என்பவர்  பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து  பெரும் அதிர்ச்சியும்,  வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியில் இருக்கும் போது  செந்தில்குமாருக்கு ஏற்பட்ட இறப்புக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால்,  மறைந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது நியாயமல்ல. மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. செந்தில் குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.