ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்.. இதுதான் காரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு , கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அண்மையில் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ‘பாரத் சினிமா’ என்கிற பெயர்கொண்ட எக்ஸ் பக்கத்தில், ராகுல் காந்தி ஒடிசாவுக்கு வந்தால் ‘நாதுராம் கோட்சேவாக மாறிவிடுவேன்’ என்றும், ‘உங்கள் பாட்டி இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்’ என்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் சார்பில் சைபர் கிரைம் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜக தலைவர் ஒருவரின் மிரட்டல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஷிண்டே சேனா எம்.எல்.ஏ., ராகுல் காந்தி ‘அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும் ’ என்று கூறியிருக்கிறார்.
எனது சகோதரர் ராகுல் காந்தியின் சிறப்பு, பெருகிவரும் மக்கள் ஆதரவும் பலரை நிலைகுலையச் செய்திருப்பதே, இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுத்தது. எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.