×

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல்..!

 

தலைநகர் டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அதிஷி இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்தப் பிரசாந்த விஹார் பகுதியில் 2 மாதங்களில் 2-வது முறையாக இதுபோல சம்பவம் நடந்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு பெரிய தொய்வு ஏற்பட்டிருப்பதை இந்தச் சூழ்நிலை சுட்டிக்காட்டுகிறது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான் காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லிவாசிகளின் பாதுகாப்பை புறக்கணிப்பதாக தெரிகிறது” என்றார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் அதிகரிக்கும் பாதுகாப்பின்மை உணர்வை காட்டுவதாக உள்ளது. டெல்லியில் எங்கு பார்த்தாலும் அச்சமான சூழல் நிலவுகிறது. இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். மேலும் தங்கள் மகள்கள் வெளியில் செல்வதைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்” என்றார்.

அடுத்த ஆண்டு, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை தலை தூக்கியிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.