×

"தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவைச் சிதைத்த திமுக அரசு" - அமமுக  ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

 

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவைச் சிதைத்து், அவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் திமுக அரசை கண்டித்து கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும் என்று தினகரன் அறிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டிருக்கிறது திமுக அரசு. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என வயது வித்தியாசமின்றி போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை வேடிக்கை பார்த்து அவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்ததற்காக தமிழக மக்கள் முன்பாக திமுக அரசும், அதன் முதலமைச்சர் அவர்களும் வெட்கித் தலை குனிய வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மூலமாக மட்டுமே அரசுப் பணி நியமனம் என்ற அரசின் அறிவிப்பை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நேரடி நியமனத்தையும் நடத்தும் திமுக அரசின் மறைமுக நடவடிக்கை தேர்வர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி, தேர்வுகளில் முறைகேடு என தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மீது எழும் தொடர் குற்றச்சாட்டுகள் அதன் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்திருக்கிறது. அரசுப் பணியை எதிர்பார்த்து காத்திருந்து வயதை தொலைத்து விரக்தியடைந்த இளைஞர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயம் தமிழகத்தில் நிலவுகிறது.

தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததற்கு பின்னர் கஞ்சா, குட்கா, அபின், ஹெராயின், கொகைன் உள்ளிட்ட கொடிய வகை போதைப் பொருட்கள் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை தாரளமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறுவேன் என இந்திய ஆட்சிப்பணி மற்றும் காவல் பணி அதிகாரிகள் மத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ரூ.180 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் குறித்தும், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக கூறி தேடப்பட்டு வரும் திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் குறித்தும் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? என பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்.

கேள்விக்குறியாகியிருக்கும் இளைஞர்களின் எதிர்காலம், வீதியெங்கும் திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், நாள்தோறும் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் என அனைத்து வகையான நிர்வாகச் சீர்கேடுகளின் மொத்த உருவமாக திகழும் திமுக அரசைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வரும் 11ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

திருச்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டனப் பேருரையாற்றுகிறார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், வட்ட/வார்டு/கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.