×

தேவநாதன் மோசடி வழக்கு - ஆவணங்கள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்.. 

 

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய்  மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனரும், பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர்  அண்மையில் கைது செய்தனர். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படிந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.   

மேலும் தேவநாதனின் 5 வங்கி கணக்குகள் உள்பட   நிதி நிறுவனத்தின் 18  வங்கி கணக்குகள், குணசீலன் மற்றும் மகிமைநாதனின் தலா 2 வங்கிக் கணக்குகள் என மொத்தம் 27 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.  ஏற்கனவே   நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக  தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவன, அடையாறு, வண்ணாரப்பேட்டை ,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் என  8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட மூன்று பேரின் 7 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. ஏழு நாட்கள் காவல் முடிவதை அடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேரும் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். தேவநாதன் வழக்கில் இதுவரை கைப்பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மயிலாப்பூர் நிதி நிறுவன தலைமை அலுவலகம்,  பார்க் டவுன், வண்ணாரப்பேட்டை,  சைதாப்பேட்டை, பெரம்பூரில் நடந்த சோதனையில் 3 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.