×

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை மதியம் வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 20-ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம்‌ அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு மாண்புமிகு பாரத பிரதமர்‌ அவர்கள்‌ 20.01.2024 அன்று வருகை தருவதை முன்னிட்டு மாண்புமிகு பாரத பிரதமர்‌ அவர்களின்‌ பாதுகாப்பு நலன்‌ கருதி 19.01.2024 மாலை 6 மணி முதல்‌ 20.01.2024 பிற்பகல்‌ 2.30 மணிவரை ஸ்ரீங்கம்‌ அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில்‌ பக்தர்கள்‌ பொது தரிசனம்‌ செய்ய அனுமதி இல்லை என்ற விபரம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.பிரதீப்குமார்‌, இ.ஆ.ப. அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார். சென்னையிலிருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் செல்கிறார். ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றுக் கரையில் ஹெலிகாப்டர் இறங்குதலமான ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.